பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் கீழ்பாக்கத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நோக்கி சென்ற இன்னோவா கார் ஈகா தியேட்டர் சிக்னல் சந்திப்பில் இருந்து தாறுமாறாக ஓடி சாலைகளில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே துரத்தி பிடித்து உள்ளிருந்த இருவரை வெகுவாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வேப்பேரி போக்குவரத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் சிக்கி படுகாயம் அடைந்த ஏழு நபர்களை பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
போலீசார் விசாரணையில் கார் உரிமையாளர் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாரஸ்மால்(61) என்பது தெரியவந்தது. இவர் கீழ்பாக்கத்திலிருந்து சௌகார்பேட்டை செல்வதற்காக அரும்பாக்கத்தைச் சேர்ந்த தனது கார் ஓட்டுனரான ரமணி(60) என்பவர் உடன் காரில் பயணித்துள்ளார். அப்போது கார் ஓட்டுநர் ரமணிக்கு மயக்கம் ஏற்பட விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும், விபத்து நடந்த போது பயத்தில் கார் ஓட்டுநர் ரமணி காரை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இதன் பின் போலீசார் போன் செய்து அழைத்ததும் அவரே வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததுள்ளார். ரமணியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி பக்கவாதம் ஏற்பட்டு பின் சரியாகி தற்போதும் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நிலையில் இன்று மதிய உணவு சாப்பிடாமல் இருந்த ரமணி மாலை கார் ஓட்டி வரும்போது மயக்கம் ஏற்பட்டு நிதானிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களிடம் சிக்கினால் தன்னை அடிப்பார்கள் என பயந்து அங்கிருந்து ஓடியதாகவும் பின் போலீசார் கால் செய்ததும் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவித்தார்.
கார் விபத்து ஏற்படும்போது காரினுள் இருந்த கார் உரிமையாளர் பாரஸ்மால், தனது மகன் ரோமில் என்பவருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்க, அவர் காவல் ஆணையர் அலுவலகம் அருகே வந்து தனது தந்தையை மீட்பதற்காக வந்துள்ளார். அப்போது பின்னால் துரத்தி வந்த பொது மக்களிடம் காரினுள் இருந்த பாரஸ்மால் மற்றும் அவரை மீட்பதற்காக வந்த அவரது மகன் ரோமில் ஆகிய இருவரையும் பிடித்து வெகுவாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநரான ரமணியை கைது செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், போலீசார் விசாரணையில் இந்த விபத்தில் காயம் அடைந்தது இருசக்கர வாகன ஓட்டியான வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (43), ஆட்டோ ஓட்டுநரான பெரிய மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(38), அவரது ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அபிபுல் நிஷா, அவரது தாய் பர்வீனா ( 28), இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கொண்டிகொத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுலேகா மாஜி (32) அவரது இரண்டு மகன்களான ஆரியன் மாஜி( 8), மணிஷ்மாஜி (13) என்பது தெரியவந்தது.
இதில் ஆட்டோ டிரைவர் கார்த்திக்குக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி லோகேஷ் என்பவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணம் செய்த 13 வயது சிறுமி அபிபுல் நிஷா என்பவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் தனது தாயுடன் பயணம் செய்த ஆரியன் மாஜி என்ற சிறுவனுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.