ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமைக்குரிய ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேருவிற்கு குழந்தைகள் மீதிருந்த அளவுகடந்த பாசத்தினால், அவரது பிறந்த நாளன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகிறோம். குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுத்தவும், இன்றைய குழந்தைகள் நாளையே எதிர்காலம் என்ற அவரின் கருத்துகளை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் குழந்தைகள் தினத்தன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை என்று தெரிவித்துள்ளார்.
நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம்!
நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.