தமிழ்நாடு

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!
சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சோமுதெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் சென்னைக்கு வந்து தங்க நகைகளை வாங்கி சென்று சொந்த ஊரில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை வந்த ரவிச்சந்திரன் சவுகார்பேட்டை பகுதியில் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

பிறகு தங்க நகைகளை எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு பேருந்தில் செல்ல முடிவு செய்துள்ளார். எழும்பூர், பாந்தியன் சாலை இருதய ஆண்டவர் சர்ச் அருகே சுமார் 131 கிராம் தங்க நகைகள், 1.250 கிலோ வெள்ளிப்பொருட்கள், பணம் ரூ.31,39,045 அடங்கிய பையுடன் பேருந்துக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது. அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

அவரிடமிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு ரவிச்சந்திரனை போரூர் அருகே காரிலிருந்து கீழே இறக்கி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ரவிச்சந்திரன் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்ற கமல், முத்து ராமலிங்கம், தீனா என்ற தினகரன், பிரேம் குமார், முத்துலிங்கம், மதுரையைச் சேர்ந்த பிரபு ஆகியோரை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மற்றும் மானாமதுரையில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், வெள்ளி கட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், பணம் ரூ.6.50 லட்சம் மீட்கப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்திய 7 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் ரவிச்சந்திரன் வாரத்தில் 3 நாட்கள் சென்னை, சவுகார்பேட்டை வந்து நகைகளை வாங்கி விட்டு, ஆட்டோவில் எழும்பூருக்கு சென்று தனியார் பேருந்தில் காரைக்குடிக்கு செல்வது வழக்கம். இதனை ஒரு வாரமாக கும்பல் நோட்டமிட்டு, ரவிச்சந்திரனை காரில் பின்தொடர்ந்து கடத்திச்சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ரவிச்சந்திரன் சாவகாசமாக கொள்ளையர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டது போல், வண்டியில் செல்வதை கண்டு போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதன் பின்பு ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கடத்தப்பட்ட ரவிச்சந்திரனிடம் ஏற்கனவே இதே போன்று காரைக்குடியில் கடத்தி நகை பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் முயன்றதாகவும் அதே பாணியில் எழும்பூரில் தன்னை கடத்த முயல்வதை அறிந்து சாதுரியமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடத்தல் கும்பல் தன்னை தாக்கி காயப்படுத்தி விடக்கூடாது என நினைத்து அவர்கள் கூறியதை செய்ததாகவும் ,கையில் வைத்திருந்த நகை பணத்தை கொடுத்து விட்டதாகவும் ரவிச்சந்திரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த பொழுது பொலிரோ வாகனத்தில் கடத்தல் கும்பல் அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. சுங்கச்சாவடி சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்தபோது பொலிரோ வாகனத்தில் நம்பர் ப்ளேட்டை மாற்றி கடத்தல் காரர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அந்த வாகனத்தில் ஒட்டப்பட்ட ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஸ்டிக்கரை கடத்தல் கும்பல் அகற்ற மறந்து விட்ட காரணத்தினால் அதை வைத்து போலீசார் பின் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கடத்தல் கும்பல் சேர்ந்த ஆறு பேரை மானாமதுரையில் கைது செய்தனர்.

இந்த கும்பலில் முத்துலிங்கம் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. முத்துலிங்கம் அடிக்கடி சென்னை சவுகார்பேட்டைக்கு வருவதால் இதேபோன்று நகைகளை எடுத்துச் செல்லும் நபர்கள் யார் யார் என்பது குறித்து கண்டுபிடித்து அவர்களை நோட்டமிட்டு இதுபோன்று கடத்திக் கொள்ளையடிக்கும் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே காரைக்குடி மானாமதுரை பகுதிகளில் இதேபோன்று கூட்டாளிகளை சேர்த்து வைத்துக்கொண்டு போலீசார் போல் நடித்து வாகனத்தில் கடத்திக் கொள்ளை சம்பவத்தை முத்துலிங்கம் அரங்கேற்றியுள்ளதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர் . இது தொடர்பாக வழக்குகளும் விசாரணையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் மீண்டும் சிறைக்கு சென்ற முத்துலிங்கம் புதிதாக சிறையில் கூட்டாளிகளை உருவாக்கி அதே பாணியில் கைவரிசையை மீண்டும் காட்டியது தெரியவந்துள்ளது.

சிறையில் பழக்கமானவர்களிடம் போலீசார் போல் ஹேர் கட்டிங் செய்து கடத்தலில் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுபோன்று புதிய புதிய நபர்களை சிறையில் பழக்கமாக்கி கூட்டாளிகளாக வைத்துக்கொண்டு கடத்திக் கொள்ளை சம்பவத்தில் நிகழ்த்தினால் தான் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க முடியும் என முத்துலிங்கம் திட்டம் தீட்டியதாக விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தில் பாதி முத்துலிங்கத்திற்கும், மீதி கடத்தலுக்கு உதவிய கூட்டாளிகளுக்கு பிரித்துக் கொடுத்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியதாக கைதானவர்கள் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். குறிப்பாக தேனியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி சென்னையில் வாடகைக்கு விட்டிருந்த காரை முத்துலிங்கம் வாடகைக்கு எடுத்து இந்த கொள் வாடகைக்கு எடுத்து இந்த கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே பாணியில் கடத்தல் காரர்கள் வேறு ஏதேனும் கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளார்களா என்பதை குறித்து, கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவானவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட முத்துலிங்கம் உள்ளிட்ட ஆறு பேரையும் விசாரணைக்குப் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரே பாணியில் கடத்திக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அதே பாணியில் கடத்தப்பட்ட நபரையே மீண்டும் கடத்தி சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.