கடந்த 17-ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்திச் சென்று 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை அதிகாரி பிரதீப் ஆகிய நான்கு நபர்கள் திருவல்லிக்கேணி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன் மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் மட்டும் தனியாக, கடந்த மூன்று மாதங்களில் 4 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், அதன் மூலம் சுமார் ஒரு கோடி வரை பணம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடைவில்லை என்றும், இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவரை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதால் ஜாமீன் கோரிய விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல்துறையினரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்து கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.