தமிழ்நாடு

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!
சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்!
இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனமும் இணைந்து, எதிர்காலப் போக்குவரத்துத் தீர்வுகளுக்கான தொழில்-கல்வி கூட்டுமுயற்சியை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஆராய்ச்சி, கல்வி மற்றும் பணியாளர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்தக் கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆதரவு:

தொழில்-கல்வித்துறை கூட்டு முயற்சிகளில் கவனம் செலுத்தும் வகையில், அதிநவீன ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்குடன், சென்னை ஐஐடி ஆராய்ச்சி அறிஞர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பரிசீலிக்கும். அதேபோல, இந்நிறுவன ஊழியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட எம்.டெக்., பி.எச்.டி. உள்ளிட்ட பட்டப்படிப்புகளைச் சென்னை ஐஐடி வழங்கும்.

மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாடு:

மேலும், ஹீரோ மோட்டோகார்ப் ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி சிறப்பு குறுகிய காலப் பாடத் திட்டங்களை வழங்க உள்ளது. குறிப்பாக, மின்சார வாகன மேம்பாடு, பேட்டரி செல் தொழில்நுட்பம் மற்றும் வாகன இயக்கவியல் போன்ற முக்கியத் துறைகளில் இந்தச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்தக் கூட்டுமுயற்சியின் மூலம், இந்தியாவில் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் முக்கியப் பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.