தமிழ்நாடு

“பிடுங்கி நட்டால் பயிர் பெரிதாகத்தான் வளரும்” – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் நேரு பதிலடி

திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

 “பிடுங்கி நட்டால் பயிர் பெரிதாகத்தான் வளரும்” – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் நேரு பதிலடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
விவசாயத்தில் ஒரு பயிரை வேரோடு பிடுங்கி நட்டால், அது முன்பை விடப் பெரிதாகத்தான் வளரும். கடந்த 15 ஆண்டுகளாக எங்களை வேரோடு பிடுங்க முயற்சி செய்து பாஜக தோற்றுப்போயுள்ளது. இனியும் அதுதான் நடக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திருநெல்வேலியில் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவின் ஆசை

பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்திற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழகத்தில் திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிவோம்" என்று பேசி இருந்தார். அவரது இந்தப் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக, அமைச்சர் கே.என். நேரு திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “பாஜகவினர், நயினார் நாகேந்திரனை தலைவராகப் போட்டு ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அந்தக் கூட்டத்தில், திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள். விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்தப் பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல, அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

கடந்த 15 வருடங்களாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பாஜக பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியவில்லை. திமுக கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் திமுகதான் மாபெரும் வெற்றி பெறும்.

கூட்டணியில் குழப்பம்

அதிமுக-பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் மூன்று முறை வந்த அமித்ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அதுகுறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை, அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

உண்மையில், அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பாஜகவினரும் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, 'நாங்கள் ஜெயித்துவிடுவோம், ஆட்சியைப் பிடித்துவிடுவோம்' என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.

மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வர்

முதல்வரை யார் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதலமைச்சருக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார்.
தோற்றுப் போய்விடுவோம் என்ற பயத்தில்தான் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜகவினர் பல்வேறு பிரச்சினைகளைச் செய்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுகவிற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.