தமிழ்நாடு

கோவை - கேரளா எல்லையில் பரபரப்பு: 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் பறிமுதல்!

கோவையில் இருந்து கேரளாவுக்கு 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் கடத்த முயன்ற லாரி தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் பிடிபட்டது.

கோவை - கேரளா எல்லையில் பரபரப்பு: 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் பறிமுதல்!
2,000 kg of gelatin explosives seized
கோவையில் இருந்து கேரளாவுக்கு 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் கடத்த முயன்ற லாரி ஒன்று தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் பிடிபட்டது. இந்தச் சம்பவம் மதுக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகசியத் தகவல் மற்றும் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறியவும் தமிழக அரசின் சார்பில் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை கோவையிலிருந்து ஒரு லாரி மூலம் கேரளாவுக்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜெலட்டின் கடத்திச் செல்லும் லாரியைப் பிடிக்க தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

வெடிபொருள் பறிமுதல்

இன்று அதிகாலை 4 மணியளவில், கேரளாவிற்குச் செல்லும் வழியில் மதுக்கரை அருகே தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர். லாரியின் உள்ளே பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இவற்றின் மொத்த எடை சுமார் 2,000 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. உடனடியாக, தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தீவிர விசாரணை

மதுக்கரை போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், லாரி ஓட்டுநர் சுபேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியில் கொண்டு செல்லப்பட்ட இந்த ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள், கேரளாவில் உள்ள ஒரு கல்குவாரிக்கு மலைகளை உடைக்கப் பயன்படுத்த கொண்டு செல்லப்படுவதாக ஓட்டுநர் சுபேர் கூறியதாகத் தெரிகிறது.

இந்த வெடிமருந்தைக் கொண்டு செல்ல உரிய உரிமம் மற்றும் ஆவணங்கள் உள்ளதா என்றும், இதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.