தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Gold Rate
கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் அதிரடி ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. நேற்று அதிரடியாக உயர்ந்த விலை, இன்று கணிசமாகக் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

விலையின் உச்சம் மற்றும் ஏற்ற இறக்கம்

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி, ஒரு சவரன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத தங்கம் விலையின் உச்சமாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.89,000-க்குக் கீழ் வந்தது. இதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற இறக்க நிலை நீடித்து வந்ததை காண முடிந்தது. கடந்த 10-ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்தது. அதற்கு மறுநாள் (நவம்பர் 11) ரூ.1,760 உயர்ந்து, அதற்கடுத்த நாள் சவரனுக்கு ரூ.800 குறைந்தது.

நேற்று மற்றும் இன்றைய விலை நிலவரம்

நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,200-க்கும், ஒரு கிராம் ரூ.11,900-க்கும் விற்பனையானது. நேற்று அதிகரித்த தங்கம் விலை இன்று காலை சரிந்தது. இன்று காலையில் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,840-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பிற்பகல் சரிவு

இந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.93,920-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ரூ.11,740-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.1,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.