அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர் புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தொடர்ச்சியாக பங்களா, வில்லா போன்ற வீடுகளை குறிவைத்து பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கரணை சுண்ணாம்பு கால்வாய் தெரு பகுதியில் வீடு ஒன்றில் உகந்து கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி செல்போன் மற்றும் சிறிதளவு பணத்தை கொள்ளையடித்த வழக்கில் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இந்த வழக்கில் ஞானசேகரனை தார் ஜீப்பை அடையாளமாக வைத்து சிசிடிவி காட்சிகள் மூலமாக கைது செய்ய நெருங்கிய சமயத்தில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் கடந்த 2023 மற்றும் 24ஆம் ஆண்டில் ஞானசேகரன் பள்ளிக்கரணை பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட பெரிய வீடுகளை குறிவைத்து சுமார் 200க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளை அடித்து இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கி இருப்பதும் பெண்களுடன் ஜாலியாக செலவு செய்வதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகளை போலீசார் ஞானசேகரனிடம் இருந்து மீட்கவும், இதே போல எத்தனை வீடுகளை குறிவைத்து ஞானசேகரன் நகை பணத்தை கொள்ளையடித்துள்ளார் என்ற விவரங்களை பெறவும் போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நகை பணத்தை கொள்ளையடிக்கும் போது ஞானசேகரன் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்திருப்பதால், இதே போல எத்தனை பெண்களிடம் பாலியல் செய்தலில் ஈடுபட்டார் அவர்கள் பயந்து போலீசாரிடம் தெரிவிக்கவில்லையா என்ற கோணத்திலும் ஞானசேகரன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவிற்கு பின்னர் மீதமுள்ள திருட்டு வழக்குகளிலும் ஞானசேகரன் போலீசார் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.