தமிழ்நாடு

'நான் யானை அல்ல.. குதிரை' செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு!

கோவையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'நான் யானை அல்ல.. குதிரை' செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் அவரது ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில் "நான் யானை அல்ல, குதிரை... டக்குனு எழுவேன்" என்ற படையப்பா பட வசனத்துடன் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை இணைத்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

செந்தில் பாலாஜி நீக்கம்

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா? என்பதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், திமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள இந்த போஸ்டர்கள், அவர் விரைவில் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.