தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

ராசிபுரம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!
Female SSI dies at police station
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்து பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக காமாட்சி(48) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ. காமாட்சி நேற்று இரவு ரோந்து பணிக்கு சென்று விட்டு மீண்டும் நள்ளிரவு 2 மணி அளவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

காவல் நிலையத்திற்கு வந்த காமாட்சி அங்குள்ள ஓய்வறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஓய்வறைக்கு சென்ற அவர், காலை வரை கதைவை திறக்காமல் இருந்துள்ளார். மேலும், காலை பணிக்கு வந்த காவலர்கள் காமாட்சியின் ஓய்வறையின் கதவு உள் பக்கமாக தாழிட்டிருப்பதை கவனித்துள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் காவலர்கள் உதவி கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது, காமாட்சி உயிரிழந்த நிலையில் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் காவலரின் உடலை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனைத்தொடர்ந்து, காமாட்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ காமாட்சி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்திலேயே பெண் எஸ்.எஸ்.ஐ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.