தமிழ்நாடு

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை
farmers massacre continues in erode and tiruppur area
ஈரோடு மாவட்டம், விளக்கேத்தி அருகில், மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாயிகள் ராமசாமி, பாக்கியம்மாள் ஆகியோர் திருடர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த விவசாயிகளிடையே மீண்டும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

”ஈரோடு மாவட்டம் - சென்னிமலை, அரச்சலூர், திருப்பூர் மாவட்டம் - சேமலை கவுண்டன் பாளையம் ஆகிய ஊர்களில் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான விவசாயிகள் பணம் - நகைக்காக கொடூரமான முறையில் கடந்த ஓராண்டுக்குள் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் - சேமலை கவுண்டன்பாளையத்தில் இதேபோன்று மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது, மிகப்பெரிய அளவில் காவல் துறையால் தனிப்படைகள் உருவாக்கப்பட்டது, இதுவரை திருட்டில் துப்பு துலங்கவில்லை, அதற்குள் மீண்டும் தற்போது, அதேபோன்று தனியாக வசித்து வந்த வயதான விவசாய தம்பதிகளை குறி வைத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த மறுநாள் அருகில் உள்ள விவசாயிகள் தேடிச் சென்று பார்த்த போது தான் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளதும், நகையும் திருடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று திருடர்களும் , சமூக விரோதிகளாலும், தீவிரவாதிகளாலும் உத்தர பிரதேசத்திலும், பீகாரிலும், ஜம்மு காஷ்மீரிலும் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சுறுத்தலை சந்தித்தபோது, மாநில அரசுகள் கிராமப்புற இளைஞர்களை தேர்ந்தெடுத்து ஆயுதப் பயிற்சி கொடுத்து, கிராமங்களை பாதுகாப்பதற்காக நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியாக கொடூர கொலைகளோடு இணைந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை காவல்துறையால் திருட்டு கொலைகாரர்களை கைது செய்ய முடியாததும், படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும் விவசாயிகள் பாதுகாப்பில் இனியும் காவல்துறை சரியாக செயல்படும் என்ற நம்பிக்கை பொய்த்திருக்கிறது.

எனவே தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் உள்ள விவசாயிகள் - பொதுமக்கள் கொண்ட பாதுகாப்பு படையை உருவாக்கி, நவீன துப்பாக்கிகளை கையாளுவதற்கு உரிய பயிற்சியை கொடுத்து கிராம காவல் பாதுகாப்பு படைகளை உருவாக்க வேண்டும், தனியாக தோட்டத்து சாலைகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு மாநில அரசே துப்பாக்கி உரிமத்தை முன்வந்து வழங்கி, துப்பாக்கியையும் அரசு செலவில் வழங்கி மதிப்புமிக்க விவசாயிகளின் உயிர்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் 15 விவசாயிகள் ஒரே முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டித்திடும் வகையில் நிரந்தர சிறப்பு காவல் புலனாய்வு குழுவை (special investigation team ) உருவாக்கக்கோரி நாளை (04-05-2025) முத்தூர் - விளக்கேத்தி செல்லும் சாலையில் உள்ள மோளப்பாளையம் நால்ரோடு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.