தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ்: அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர், அவிநாசிரோடு டி.எஸ்.கே. பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில், மருத்துவ பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ்: அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூரில் கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ்.. தொடரும் அவலநிலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!
திருப்பூர் மாவட்டம், பெரியார் காலனியைச் சேர்ந்த பானுமதி என்ற 5 மாத கர்ப்பிணி, அவிநாசி சாலையில் உள்ள தாய் சேய் நல மையத்திற்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு, ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் குளுக்கோஸ் வழங்கியுள்ளனர். வீட்டிற்குச் சென்று குளுக்கோஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, அந்த குளுக்கோஸ் பாக்கெட் காலாவதி ஆகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் குறிப்பிட்டிருந்த தேதி காலாவதியாகி பல மாதங்கள் கடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி, உடனடியாக சுகாதார மையத்திற்கு சென்று ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுகாதார நல அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்துள்ளார். மேலும், அங்கு காலாவதியாகி இருந்த பத்துக்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் தரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் நிலையில், இத்தகைய அலட்சியம் அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.