தமிழ்நாடு

7 மடங்கு அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்.. லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது ஏழு மடங்கு சொத்து சம்பாதித்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2 கோடி சொத்து இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு14 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 7 மடங்கு அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்.. லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன். இவர் கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். சேவூர் ராமசந்திரன் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு கடந்த சனிக்கிழமை அவருக்கு தொடர்பான இரண்டு இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 15 மணி நேரம் சோதனை என்பது நடைபெற்று பல முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்பாக, அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கடந்த 2016 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனைகளை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவரது மனைவி மணிமேகலை மகன்கள் சந்தோஷ் குமார் விஜயகுமார் ஆகியோர் மீது இந்த சொத்துக்கு குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சேவூர் ராமச்சந்திரன் அதிமுகவில் ஆரணி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது தன் பெயரிலும் தன் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள் குறித்து தாக்கல் செய்திருந்தார் அதில் 2016 ஆம் ஆண்டு சொத்து மதிப்பு தாக்கல் கணக்குப்படி 2 கோடியே 73 ஆயிரத்து 127 ரூபாய் சொத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதேபோன்று 2021 ஆம் ஆண்டு ஆரணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த போது சேவூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த சொத்து மதிப்பு ஆய்வு செய்ததில் 14 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 798 ரூபாய் என தெரியவந்தது. இந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு குறித்து விரிவாக விசாரணை நடத்தியதில் 8 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 487 சேர்த்துள்ளது தெரிய வந்தது. இது வருமானத்தைவிட 125.39 சதவீதம் அதிகம் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் அவரது வரவு செலவு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட ஆய்வு செய்து பார்த்தபோது ஆறு கோடியே 40 லட்சத்தி 85 ஆயிரத்து 148 ரூபாய் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் 2016 ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த சேவூர் ராமச்சந்திரன், 2021 ஆம் ஆண்டு சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் ஏழு மடங்கு சொத்துக்களை குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பணத்தை வைத்து இந்த சொத்துக்களை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவலுக்கு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சேவூர் ராமச்சந்திரன் அவரது மனைவி மணிமேகலை பெயரில், ஜே. கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தையும், மகன் சந்தோஷ்குமார் பெயரில் வாட்டர் பாண்ட் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தையும் 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் தனது மனைவி, மகன்கள் மூலமாக 2018 ஆம் ஆண்டு பிஎம் சோமசுந்தரம் முதலியார் கல்வி அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி ராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளி அந்த அறக்கட்டளையின் கீழ் நடத்தியதும் தெரியவந்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தொடர்ந்து, லஞ்சஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.