சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் அவரது ஓட்டுநர் துரையிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆகாஷ் பாஸ்கரன்
திரைத்துறையில் சமீப காலத்தில் அனைவரும் பேசப்படும் ஒருவரது பெயர் என்றால் அது ஆகாஷ் பாஸ்கரன். சமீபத்தில் பிரபல நட்சத்திரங்கள் இவருக்கு திருமணத்தில் பங்கேற்றது பெரும் பேசும் பொருளாக இருந்தது. ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்த மாவட்டம் சேலம். ஆகாஷ் பாஸ்கரன் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் ஆகாஷ் பாஸ்கரன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள், அமரன் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
இதன் பிறகு தான் டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தற்போது முன்னணி நட்சத்திரங்களை தனது படங்களில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் இவர் தயாரித்த தயாரித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
ரூ.500 கோடி வரை பட்ஜெட்
அதேபோல சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் சிம்புவின் 49வது திரைப்படம் ஆகிய படங்களை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். சுமார் 400 லிருந்து 500 கோடி வரை இந்த திரைப்படங்களுக்கான பட்ஜெட் இருக்கும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை திரைப்படங்களை தயாரிக்க இவருக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று பல்வேறு கேள்விகளை திரைத்துறையினரே முன் வைக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகாஷ் பாஸ்கரனுடைய வீட்டில் சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக்கில் நிகழ்ந்த ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பான விஷயத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே அதன் அடிப்படையில் தான் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. டாஸ்மாக்கில் கிடைத்த பணத்தை இவர் தயாரிக்க கூடிய திரைப்படங்களில் முதலீடு செய்திருப்பதாக சந்தேகம் இருந்திருக்கிறது.
அமலாக்கத்துறை சம்மன்
அதன் அடிப்படையிலேயே இந்த சோதனையும் மேற்கொள்ளப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் சொல்கிறது. ஆகாஷ் பாஸ்கரனின் குடும்பப் பின்னணி என்பது அரசியல் சார்ந்ததாக இருக்கிறது.இந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கர் மற்றும் துரைராஜ் செல்வராஜ் என்ற நபர் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் துரைராஜ் செல்வராஜ் என்ற நபர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகி வரும் இட்லி கடை , பராசக்தி மற்றும் இதயம் முரளி உள்ளிட்ட படங்களுக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.