தமிழ்நாடு

போதைப்பொருள் விற்பனை வழக்கு: சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது!

சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை வழக்கு: சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது!
Simbu film co producer arrested
சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் அதிமுக-வின் வியூக அமைப்பாளருக்குச் சொந்தமான பணமும் கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் சங்கிலி மற்றும் கைது நடவடிக்கை

போதைப்பொருள் விற்பனை தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கண்காணித்தபோது, தியாகேஸ்வரன் என்ற நபர் பெங்களூரில் இருந்து ஓஜி கஞ்சாவை வாங்கி வந்து சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலே, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழில்அதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோருக்கு விலையுயர்ந்த ஓஜி கஞ்சாவை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷர்புதீன், நடிகர் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் மற்றும் அதிமுக பிரமுகர் தொடர்பு

கைதான மூன்று பேரிடமிருந்து 10 கிராம் ஓஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.27.5 லட்சம் ரொக்கப் பணம், ஒரு சொகுசு கார் மற்றும் 8 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம், அதிமுக-வின் வியூக அமைப்பாளரான ஹரி என்பவருடையது என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, அதிமுக-விற்கு ஆதரவாகச் செயல்படும் சமூக ஊடக மேலாண்மைப் பணியாற்றும் பிரமன்யா நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகியோரை அலுவலகத்திற்குள் சென்று அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் விற்பனையில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.

சினிமா பிரபலங்கள் தொடர்பு?

மேலும், திரைப்பட இணை தயாரிப்பாளர் ஷர்புதீன் வீட்டிற்கு வரக்கூடிய 18 பேர் கொண்ட பட்டியலை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரமாக்கி உள்ளனர். சினிமா பிரபலங்கள் மற்றும் மாடலிங் துறையில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் இவர் நடத்தும் பார்ட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த பார்ட்டிகளில் மெத் (Meth), கொக்கைன் மற்றும் ஓஜி கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சில இளம் தயாரிப்பாளர்கள், சில நடிகர்கள் மற்றும் சினிமா துறையில் உள்ள சில பெண்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.