தமிழ்நாடு

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை
Cyber Crime Police Rejects Madurai Aadheenam Seeks Video Conference Appearance for Police Summons
மதுரை ஆதீனம் 293-வது மடாதிபதி ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், அண்மையில் தருமபுர ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து தனது சொந்தக் காரில் சென்னைக்குச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதியது.

பின்னர் சென்னை வந்த மதுரை ஆதீனம், "என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். இதில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கலாம்" எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் அவரது குற்றச்சாட்டை மறுத்து சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனம் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.

இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், தான் சார்ந்த சைவ சமய உணர்வாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டதாகவும், இதன் மூலம் நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கெட்ட நோக்கத்தோடு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பியதாகவும் மதுரை ஆதீனம் மீது வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இப்புகார் குறித்து சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மதுரை ஆதீனத்தின் மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், சமூகங்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கடந்த ஜூன் 30ஆம் தேதி ஆஜராகும்படி மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், இன்று (ஜூலை 5) ஆஜராக வேண்டும் என இரண்டாவது முறையாக மதுரை ஆதீனத்திற்கு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். எனினும், வயது முதுமை, உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தயார் எனத் தெரிவித்து மதுரை ஆதீனம் காவல்துறையினருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், காவல்துறையினர் வழக்கு விசாரணைக்கு நேரில் தான் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்