தமிழ்நாடு

சர்ச்சை பேச்சு...பதவி பறிப்பு...சென்னை விரையும் பொன்முடி

அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

  சர்ச்சை பேச்சு...பதவி பறிப்பு...சென்னை விரையும் பொன்முடி
சர்ச்சை பேச்சு

விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதர் -வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை, இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கு பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, பாடகி சின்மயி, சிபிஎம் நிர்வாகி வாசுகி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் அவரது பேச்சுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து திமுக துணைப்பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு

மேலும் பொன்முடிக்கு பதிலாக புதிய துணைப்பொதுசெயலாளராக திருச்சி சிவா எம்.பி நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக திருச்சி சிவா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பொன்முடி பேச்சுக்கு நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், தனது சர்ச்சை பேச்சு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விளக்கமளிக்க விழுப்புரத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் பொன்முடி சென்னை விரைந்துள்ளார்.இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்க உள்ளார்.முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசிய முழு வீடியோவையும் பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேர வீடியோவை மட்டும் எடிட் செய்து வீடியோவை பரப்புவதாக பொன்முடி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதலமைச்சருடன் சந்திப்பு

அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது. முன்னதாக அமைச்சர் பொன்முடி மகளிர் விடியல் பயணம் தொடர்பாக ‘ஓசி பஸ்’ பயணம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கு, தொடர் சர்ச்சை பேச்சுகளால் அமைச்சர் பொன்முடி துறை மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சில் அமைச்சர் பொன்முடி சிக்கியுள்ளது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.