அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி பேச கூடாது, மடாதிபதிகள் பற்றி பேச கூடாது, என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் கிரைம் போலீசார், டிசம்பர் 15ம் தேதி கைது செய்தனர்.தொடர்ந்து, பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறாக விமர்சித்ததாக, திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகக் கூறி, அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது கைதை சட்டவிரோதமானது என அறிவித்து, அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இதேபோல, பெண் வழக்கறிஞரை விமர்சித்த வழக்கிலும் ஜாமீனில் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த்து. இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது.
மனுதாரர் தரப்பில், முறையான நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும் கைது நடவடிக்கையின் போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி உரிய விதிமுறைகள் பின்பற்றவில்லை என வாதிட்டார். மற்ற வழக்குகளிலும் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அவர், சிறையில் சாப்பிடவில்லை என்றும், சீல் வைக்கப்பட்ட வீட்டு மீட்க வேண்டும் எனவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், உரிய சட்ட விதிகளை பின்பற்றிதான் கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும்,போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும், ஜாமீனில் விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். உரிய மனு அளித்தால் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் எனவும் வாதிட்டார்.
மேலும் அவதூறாக பேசிய வீடியோ காட்சிகளையும் நீதிபதி முன்பு காவல்துறை தரப்பில் சமர்பிக்கப்பட்டது. பின்னர் ரங்கராஜ நரசிம்மன் பேசிய வீடியோக்களை நீதிபதி பார்வையிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ரங்கராஜ நரசிம்மனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி பேச கூடாது, மடாதிபதிகள் பற்றி பேச கூடாது, சாட்சிகளை மிரட்ட கூடாது, தொடர்பு கொள்ள கூடாது என்று நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டார்.