தமிழ்நாடு

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!
Complaint against Madhampatti Rangaraj
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, இரு தரப்பினரிடமும் மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

புகாரின் பின்னணி

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிச் சென்றுவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வந்ததுடன், முதல்வர் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

இதற்கிடையில், ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா நேரில் ஆஜராகி ஆதாரங்களைச் சமர்ப்பித்து விளக்கம் அளித்தார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மாநில மகளிர் ஆணையத்தில் புகார்

காவல்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஜாய் கிரிஸில்டா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் புதிய புகார் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதும், தனது புகாரை விசாரிக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, தனது வழக்கறிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுதாவுடன் மாநில மகளிர் ஆணையத்துக்குச் சென்று அவர் தனது தரப்பு விளக்கங்களை அளித்தார்.

இரு தரப்பினரிடமும் விசாரணை

புகார் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, இன்று காலை மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார். அதேபோல், ஜாய் கிரிஸில்டாவும் காலை 10 மணி அளவில் ஆஜரானார். ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரிடமும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி குமரி தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது, இருவரும் விசாரணை அதிகாரிகளிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர்.

மீண்டும் விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்த இரு தரப்பினரையும், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் அழைத்துள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.