திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
கோயில் நிலத்தில், கோயிலின் நிதியில் வணிக வளாகம் கட்ட தடை விதிக்க கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி கோவில் நிலத்தில், அன்னதான கூடம் கட்ட முடியுமே தவிர, வணிக வளாகம் கட்ட முடியாது. வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக ஆட்சேபங்கள் எதுவும் கேட்கப்படவில்லை என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோயிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டியுள்ளன. சிதிலமடைந்துள்ள பல கோயில்களை சீரமைக்க வேண்டியுள்ளது. இவற்றின் மீது கவனம் செலுத்தாமல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாகவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.