சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் சுமார் 20 பேர் நேற்று கல்லூரி முடிந்து குன்றத்தூரில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் 88 என்ற எண் கொண்ட் மாநகர பேருந்தில் ஏறி பல்லவன் சாலை பேருந்து பணிமனை அருகே இறங்கினர்.
அயனாவரத்தைச் சேர்ந்த தங்கள் கல்லூரி தோழன் மணியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டுவதற்காக நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது அய்யப்பன்தாங்கலிலிருந்து பாரிமுனைக்குச் செல்லும் 26 என்ற எண் கொண்ட மாநகர பேருந்தில் வந்த ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் சுமார் 20 பேர் கையில் கத்தி மற்றும் கற்களுடன் இறங்கினர். நந்தனம் கல்லூரி மாணவர்களை பார்த்து ரூட் எடுப்பதற்காக இங்கு நின்று கொண்டு உள்ளீர்களா என கேட்டதாக கூறப்படுகிறது.
இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டதில் நந்தனம் கல்லூரி மாணவனான அரவிந்த் என்பவருக்கு காயம் அடைந்தார் கல்லூரி மாணவனான இம்ரான் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
பின்பு நந்தனம் கல்லூரி மாணவர்களை புது கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் கற்களை எடுத்து கொண்டு துரத்தியபோது நந்தனம் கல்லூரி மாணவர்கள் பல்லவன் இல்லம் மத்திய பணிமனை உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணிமனையில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள் வெளியே வந்ததை பார்த்து புதுக் கல்லூரி மாணவர்கள் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தை நோக்கி ஓடியபோது பாடிகார்டு முனீஸ்வரர் கோயில் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரோந்து வாகன போலீசார் கத்தியுடன் ஓடிய ராயப்பேட்டை புதுக்கல்லூரியை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்களையும், நந்தனம் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்களையும் பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் கத்தி மற்றும் கற்களுடன் பிடிபட்ட ராயப்பேட்டை புதுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி
சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.