தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?
Tamil Nadu CM Stalin to Boycott Governor’s Independence Day Tea Reception Over Policy Disputes
நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) ஆம் தேதி 79-வது சுதந்திரத்தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரத் தினத்தினை முன்னிட்டு முதல்வர் உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் நாளை தேநீர் விருந்திற்கு பல்வேறு தரப்பினருக்கு ஆளுநர் மாளிகை தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கெனவே திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் ஆளுநரின் தேநீர் விருந்தினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு ஏன்?

"தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார். அந்தத் தடையாணையினை நீக்கிட உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் அவர்கள் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகளும், அவர் போட்டு வரும் முட்டுக்கட்டைகளும் தான் காரணம்.

இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் (15.8.2025) அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள். மேலும், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் தானும் பங்கேற்கப் போவதில்லை" என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.