தமிழ்நாடு

காவல் நிலையத்தில் சினிமா டான்ஸ்: 23 போலீசார் அதிரடி இடமாற்றம்!

பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் சினிமா டான்ஸ்: 23 போலீசார் அதிரடி இடமாற்றம்!
23 போலீசார் அதிரடி இடமாற்றம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விதிமீறல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பணியின் போது சினிமா பாடல்களுக்கு நடனமாடிய விவகாரத்தில் 23 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் காவல் நிலையங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு பணியாற்றும் காவலர்கள் சிலர் சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை

காவல் நிலையத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், ஒழுக்கத்தை நிலைநாட்டத் தவறியதாகவும் கூறி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பல்லாவரம் காவல் ஆய்வாளர் பழனிகுமார் மற்றும் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் தயாள் ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அவர் உத்தரவிட்டுள்ளார்.

23 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

நடனமாடிய காவலர்கள் மட்டுமன்றி, அவர்களுக்குக் கைதட்டி உற்சாகப்படுத்திய காவலர்கள் என மொத்தம் 23 பேரை உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலைய வளாகத்திற்குள் கண்ணியக்குறைவாகச் செயல்பட்டதே இந்த கடும் நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.