கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. மாநிலம் முழுவதும் ராஜேந்திர பாலாஜி மொத்தம் 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ரவீந்திரன் என்பவர் சார்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்து 2022-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி விருதுநகர் போலீசார் அதிரடியாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ரவீந்திரன் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கச் கோரி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறார் என்றும் அதனால் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது என்றும் அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
காவல்துறை தரப்பில் முறையாக பதிலளிக்கப்படாததால், காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கூறி கடந்த மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த அடிப்படையில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு சிபிஐ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் மற்றும் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.