தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கு.. ஜெயலலிதாவின் தனி உதவியாளருக்கு சம்மன்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

கொடநாடு கொலை வழக்கு.. ஜெயலலிதாவின் தனி உதவியாளருக்கு சம்மன்
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது. மே மாதம் 6-ஆம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பூங்குன்றன் முதல் முறையாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த ஐ.ஜி. தலைமையிலான தனிப்படையினர் பூங்குன்றனை விசாரணை நடத்திய நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி-யின் இந்த புதிய நடவடிக்கை மூலம் இவ்வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.