தமிழ்நாடு

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. அண்ணாமலை கண்டனம்

கோவையில் 17 வயது சிறுமியை ஏழு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். 

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. அண்ணாமலை கண்டனம்
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற 17 வயது சிறுமி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி, கோவை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மறுநாள் சிறுமி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. சிறுமி வீடு திரும்பிய தகவலை அடுத்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் 17 வயது சிறுமி  இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் உள்ளிட்ட  சமூக வலைதளங்கள் மூலம் சில இளைஞர்களுடன் பழகி இருக்கிறார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி உள்ளது. 

இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்து உள்ளனர். அந்த 17 வயது சிறுமி அவர்களை நம்பி அங்கு சென்று உள்ளார். அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் பயந்து போன சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில்  புகார் அளித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 

இதை அடுத்து உக்கடம் போலீசார் கோவை - பாலக்காடு சாலையில் உள்ள பிரபல கல்லூரி  மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த  7 கல்லூரி மாணவர்களை கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா?”  என்று குறிப்பிட்டுள்ளார்.