தமிழ்நாடு

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!
டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!
தலைக்கவசம் அணியாமல் அதிவேக சாகசம்: சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்ற இளைஞர்களுக்கு வலைவீச்சுசென்னை, மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள காவல்துறைத் தலைவர் (டிஜிபி) அலுவலகத்தின் வாசல் முன்பாகவே, இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. அதிவேகமாகச் சென்ற இளைஞர்களைப் போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

பைக் ரேஸால் பரபரப்பு

இன்று காலை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தின் மணிக்கூண்டு அருகே, இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பந்தயத்தில் ஈடுபட்டு, அதிவேகமாகச் சாகசத்தில் ஈடுபட்டனர்.

முதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைப் பிடிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். எனினும், சில நிமிடங்கள் கழித்து டிஜிபி அலுவலக மணிக்கூண்டு அருகே `U-Turn` அடித்து மீண்டும் ராயப்பேட்டை நோக்கி இளைஞர்கள் வாகனப் பந்தயத்தில் ஈடுபட முயன்றனர்.

ஒருவர் கைது, மற்றவர்கள் தப்பி ஓட்டம்

அப்போது, அங்கு உஷாராக நின்றிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் சாலையின் குறுக்கே நின்று அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதில் ஒரு இளைஞர் தனது இரு சக்கர வாகனத்துடன் கையும் களவுமாகப் பிடிபட்டார். எனினும், பத்துக்கும் மேற்பட்ட மற்ற இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களோடு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இருசக்கர வாகனத்தோடு பிடிபட்ட அந்த இளைஞரை மெரினா போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கிருந்த வீடியோ காட்சிப் பதிவுகள் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தப்பிச் சென்ற மற்ற இளைஞர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.