தமிழ்நாடு

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை
Banana farmers demand compensation of Rs 2 lakh per acre
கடந்த ஒரு வார காலமாக அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சூறாவளி காற்றால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே வெப்ப சலன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் திடீர் சூறாவளி காற்றால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதுத்தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

”வெப்ப சலன மழை மற்றும் திடீர் சூறாவளி காற்றால் தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 2,000 ஏக்கருக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து அழிந்து உள்ளது. ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்த விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பெற்ற பயிர் கடனை கட்டுவதற்கு வழி இல்லாமல், கடுமையான சிரமத்தில் உள்ளார்கள்.”

பயிர்காப்பீடு செய்தும் பயனில்லை:

”பொதுவாகவே இது போன்ற சூறாவளி காற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டமும், விதிகளும் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும், இதுவரை உருவாக்கப்படவில்லை. புயல், பெருமழை, வெள்ளம், வறட்சி மற்றும் பெரிய விபத்துகளுக்கு பேரிடர் நிவாரண சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. வாழை மரத்திற்கு பயிர் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க அழிவு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். எனவே பயிர் காப்பீடு செய்திருந்தாலும் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

பெரும் இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது போல, சூறாவளிக்காற்று, சூரைக்காற்று போன்ற சிறு இடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்பீடு வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தம் செய்தும், மாநில அரசுகள் அதற்கான விதிகளை உருவாக்கியும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்“ என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா