இந்தியா

வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா

கிருஷ்ணரின் அன்னை தேவகி என்றாலும், அவனை வளர்த்தெடுத்தவள், யசோதாதான். அதுபோல, தாயைப் பிரிந்த வனவிலங்குக் குட்டிகளை வளர்த்தெடுக்கும் யசோதாவாக பாசத்தைப் பொழியும் சாவித்திரியம்மாவின் கதை இது.

வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா
bengaluru bannerghatta national park Savitriyamma
Bengaluru bannerghatta national park: கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்து அமைந்திருக்கிறது, ‘பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா’. இங்கு, குட்டி மிருகங்களைப் பராமரிக்கும் பணியில் தாயுள்ளத்துடன் ஈடுபட்டுவருகிறார், 46 வயதான சாவித்திரியம்மா.

வனவிலங்குகளின் பச்சிளம் குட்டிகள் சிலசமயம் தாயின் அரவணைப்பை இழக்க நேரிடுவது உண்டு. பிரசவத்தின் போது தாய் இறக்கும் போதும், இரைத் தேடப்போன இடத்தில் நடத்த ஏதாவது அசம்பாவிதத்தாலும் இளம் குட்டிகள் இப்படித் தாயைப் பிரிந்துவிட நேரிடும். அப்படி அனாதையான குட்டிகனை வனத்துறையினர் மீட்டு, வன உயிரியல் பூங்காக்களில் ஒப்படைத்து உரியமுறையில் ஆளாக்கப்படுவது உண்டு.

இந்த நடைமுறையில் சிறுத்தை, புலி, சிங்கம், யானை உள்ளிட்ட விலங்குகளின் குட்டிகளைப் பாசத்தோடு கண்ணும் கருத்துமாகக் கவனிக்கும் பணியை சாவித்திரியம்மா மேற்கொண்டு வருகிறார். புட்டியில் பாலூட்டி, குளிப்பாட்டி, கொஞ்சி வேடிக்கைகள் காட்டி, அவ்வப்போது பாட்டுப்பாடி, அன்போடு அணைத்து, அவை வாழுமிடத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்.அதுமட்டுமல்ல; சரியாக அவை உண்ணுகின்றனவா, கழிவுகளை வெளியேற்றுகின்றனவா, உறங்குகின்றனவா என்பதையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்து அன்பைப் பொழிகிறார், சாவித்திரியம்மா.

கணவரின் மறைவு.. வனவிலங்குகளுக்காக அர்ப்பணிப்பு:

2002-ம் ஆண்டு இவருடைய கணவரின் மறைவுக்குப் பிறகு கருணை அடிப்படையில் சாவித்திரியம்மாவுக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது. அதன் பின்னர், இந்த உயிரியல் பூங்காவில் வளரும் பல விலங்குகளின், பெற்றெடுக்காத தாயாகவே இவர் மாறிப்போனார்!

ஆரம்பத்தில் இவர், வன விலங்குகளின் கூண்டுகளைத் தூய்மை செய்பவராகப் பணியில் சேர்ந்துள்ளார். வளவிலங்குகளுடன் இவர் வெகு இயல்பாகவும் அன்போடும் பழகுவதைப் பார்த்த அலுவலர்கள், வனவிலங்குகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைக்கு இவரைப் பணியிட மாற்றம் செய்துள்ளனர். பின்னர், வனவிலங்குகளின் பராமரிப்பில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இவர், கூண்டுக்குள் நுழைந்ததுமே விலங்குகள் இவருடைய காலைச் சுற்றிச் சுற்றி வரும்; பிரியத்தோடு நக்கிக் கொடுக்கும்; செல்லமாக சிணுங்கும்: அரவணைப்பிற்கு ஏங்கும்!

சாவித்திரியம்மாவின் வேலை என்ன?

சாவித்திரியம்மாவின் முதல் வேலை, அவை ஒழுங்காகக் ’கக்கா' மற்றும் 'மூச்சா’ போயிருக்கின்றனவா என்று பார்ப்பதுதான். அப்படிப் போகாமலிருந்தால், அவற்றை தாஜா செய்து போகவைப்பார். அவற்றின் கழிவுகளை ஆராய்வார். அதில், இயல்புக்கு மாறாக ஏதேனும் தென்பட்டால், கால்நடை மருத்துவரிடம் சொல்லி, உரிய சிகிச்சையளிக்க உதவுவார். இவருடைய அடுத்த பிரதான வேலை வளவிலங்குகளுக்கு உணவளிப்பது. அவற்றுக்கு இதமான மசாஜ்' செய்துவிடுவார், வருடிக்கொடுப்பார்; பேச்சுக்கொடுப்பார். கண்மூடிச் சொக்கிப் போய்த் தூங்கும்வரை உடனிருந்து பார்த்துக்கொள்வார்.

குட்டிகளுக்கு 6 மாதங்கள் ஆகும் வரையிலான காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதைக் கையாள்வதில் சாவித்திரியம்மா, ஓர் எக்ஸ்பர்ட் என்றே சொல்லலாம். அதன்பிறகு குட்டிகள், ’சஃபாரி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிடும். அங்கே அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு, சஃபாரி பணியாளர்களைச் சேர்ந்தது. குட்டிகளைப் பிரியும் தினத்தன்று சாவித்திரியம்மா, விம்மி விம்மி அழுதுவிடுவாராம். சில சமயங்களில் அந்தப் பக்கம் போகாமலே இருந்துவிடுவாராம்.
Image

இதுவரை சாவித்திரியம்மா பல்வேறு மிருகங்களின் இளம் குட்டிகளை வளர்த்திருக்கிறார். அவற்றின் எண்ணிக்கை சுமார் 80 இருக்கும். குட்டிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் மற்றும் வளர்ப்பு முறையின் காரணமாக. பாதிக்கப்பட்ட குட்டிகள் பலவும் மேன்மேலும் இங்கே மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. முழு அர்ப்பணிப்போடும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் தம்முடைய பணியில் சாவித்திரியம்மா ஈடுபட்டுவருவது. உயிரியல் பூங்காவின் இதர பணியாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

"சொந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் மகிழ்ச்சியை நாள்தோறும் நான் அனுபவித்துவருகிறேன். இந்த வேலை எனக்குக் கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்று பரவசத்துடன் சொல்கிறார். சாவித்திரியம்மா.

அதிகளவில் மறுவாழ்வு:

கடந்த 2023-ம் ஆண்டறிக்கையின்படி, 'பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா'வின் மொத்தப் பரப்பளவு 731 ஹெக்டேர். 102 வகையான மிருகங்கள் இங்கிருக்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2,300. இவற்றில் பலவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, இங்கு மறுவாழ்வு பெற்றவையாகும். கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும், காயமடைந்த குட்டிகள், தாயைப் பிரிந்த குட்டிகள், அதிகளவில் இங்குக் கொண்டுவரப்பட்டு, /பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிநவீனப் பரிசோதனைக்கூடம், அறுவைசிகிச்சை அரங்கம், உடற்கூராய்வு வசதிகள் உள்பட அனைத்துமே இந்த உயிரியல் பூங்காவில் இருக்கின்றன.

(கட்டுரை ஆசிரியர்: லதானந்த், குமுதம் சிநேகிதி இதழ், 15.5.2025)