பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு குற்ற்வியல் வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், சி.எஸ்.எஸ் பிள்ளை ஆஜராகி, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய ஆவணங்களை 27 சிடிக்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருள், மணிவண்ணன் உள்ளிட்ட 6 பேர் மட்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, இந்த வழக்கில் விரைவில் சாட்சி விசாரணை தொடங்க இருப்பதால் வழக்கறிஞர்கள் வைக்காதவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதனிடையே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரன், செல்போன் வீடியோ கால் மூலம் ஆஜராகி, தன்னுடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும், சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு தன்னை சிகிச்சைகாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, நாகேந்திரனின் உடல் நிலை, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து தினந்தோறும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம், சிறைத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும், அதை அறிக்கையாக சிறைத்துறை நிர்வாகம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.