தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மற்றும் கைதான வழக்கறிஞர் ஹரிஹரன்
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் ஹரிஹரனும் ஒருவர். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனவும் தொலைபேசி மூலம் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறி ஹரிஹரனின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், மனுதாரர் ஒவ்வொரு முறையும் தனது மகனை காண சிறைக்கு செல்லும் போதும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மற்ற கைதிகளை போல அவரையும் சமமாக நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

சிறை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏ.கோபிநாத், ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மனுதாரர் உள்ளிட்ட உறவினர்கள் ஹரிஹரனை சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும், வீடியோ கால் உள்ளிட்ட தொலைபேசி வாயிலாக பேச அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மற்ற கைதிகளை போல சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் ஹரிஹரனுக்கு அளிக்க புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இதனை சிறைத்துறை டிஜிபி உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.