தமிழ்நாடு

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்பதாகவும், பிரதமர் மோடிக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும், தமிழக அரசும் தனியாக சாதி வாரி சர்வே எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடைத்தெரிந்து இருப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி மட்டும் தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது எனவும் பா.ஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எப்போதும் சாதியைப் பிளவுபடுத்தவே பயன்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி அவர்களின் இன்றைய முடிவு நாட்டின் சமூக பொருளாதார அடித்தளங்களை வலுப்படுத்தும் என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளி விவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு தனது மனமார்ந்த நன்றியை அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.