தமிழ்நாடு

செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வறுமையில் தவித்த மூதாட்டி.. உதவி செய்த MLA

தன்னிடமிருந்த செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த 78 வயதான மூதாட்டிக்கு, ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம்.

செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வறுமையில் தவித்த மூதாட்டி.. உதவி செய்த MLA
AIADMK MLA jayaram Provides Relief to Senior Citizen Holding Demonetized Currency
கோவை, உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற 78 வயதான மூதாட்டி, கடந்த 3 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் தனது மகனை இழந்துள்ளார். நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம், மூதாட்டி தங்கமணி கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன்னிடம் செல்லாத பழைய 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே உள்ளதாகவும், அதை எப்படி மாற்றுவது? என்று தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், செலவுக்கு கூட என்னிடம் வேறு பணம் இல்லை என்பதால் என்னிடமுள்ள செல்லாத நோட்டுகளை மாற்றி தனக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். போதுமான உதவி கிடைக்காத நிலையில், மிகவும் கவலையுடன் இருந்த மூதாட்டி தீக்குளித்து சாவதை தவிர, தனக்கு வேறு வழியில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது மிகவும் வைரலானது.

இதுக்குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் முதன்மை வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணத்தை மாற்றி கொடுக்க உத்தரவிட்டார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்கள் ரூபாய் 3000 வரை பணத்தை மாற்றி அந்த மூதாட்டியிடம் கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த அ.தி.மு.க சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம் மூதாட்டி தங்கமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று, ஆறுதல் தெரிவித்ததுடன் அவருக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கினார்.

எம்.எல்.ஏ செய்த எதிர்பாரா உதவிக்கு மூதாட்டி தங்கமணி நன்றி தெரிவித்தார். இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டார். அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.