சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்ட இதய நோயாளியான அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று இளைஞர் ஒருவர் பெண் வார்டில் புகுந்து அங்கிருந்த 50 வயதுடைய பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே அந்த பெண் கூச்சலிட்டதை அடுத்து அங்கு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் மதுபோதையில் இருந்த அந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி அளித்த புகாரின் பேரில் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் சலங்கை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பது தெரியவந்தது. 25 வயதான சதீஷ் குமாரின் அத்தை ஸ்ரீதேவி என்பவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், சதீஷுக்கு மருத்துவமனையில் காவலாளி வேலை வாங்கி தருமாறு கேட்டதன் பேரில் ஸ்ரீதேவி அவரை நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வரவழைத்து பெண்கள் வார்டு பகுதியில் தங்க வைத்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த சதீஷ், பெண்கள் வார்டில் தூங்கி கொண்டிருந்த நோயாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் சதீஷ் உறவினர் ஸ்ரீதேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது. பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய முக ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 13, 2025
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில்… pic.twitter.com/J4TUrxGpm7