முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல இடங்களில் பொதுமக்களுக்கு உணவுகளும், நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் ஜெ.தீபா சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி, வ.புகழேந்தி ஆகியோர் வருகை தந்து இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறியதாவது, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் பொற்கால ஆட்சிக் காலமாகதான் இன்றுவரை கருதப்படுகிறது. ஜெயலலிதா தமிழகத்திற்கே காவல் தெய்வமாக இருந்து வந்தார். அம்மாவின் பிறந்தநாளை பாரபட்சமின்றி அனைவரும் கொண்டாடி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை அதிமுக இப்போது ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் அதிமுக பிளவுப்பட்டிருப்பது பின்னடைவு. அதிமுக ஆட்சியமைக்க கண்டிப்பாக ஒன்றுபட வேண்டும். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகத்தான் உள்ளது. மாநிலங்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். அதிமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவின் விசுவாசிகள்தான். துரோகி என்று கூறுபவர்கள் அதனை யார் குறித்து குறிப்பிடுகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது.
எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று டிடிவி தினகரன் கூறுவது சசிகலாவை மனதில் வைத்துதான். அம்மாவுக்கு யார் முதலில் துரோகம் செய்தார்கள்? அம்மா இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கேள்வி தமிழ்நாட்டில் அனைவரிடத்திலும் உள்ளது. அரசியலை விட்டு விலகுவது என்பது எனது தனிப்பட்ட முடிவு தான். நான் மீண்டும் அரசியல் வரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதுகுறித்து சிந்திப்போம் என்று கூறினார்.
இந்நிலையில், திடீரென வேதா நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவருடைய நினைவுகள் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும் என்றும் அந்த இனிப்பான, சுவையான நினைவுகளுடன் போய்க் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.