தமிழ்நாடு

“ஏசி ஓடுது டாக்டர் இல்ல” டென்ஷனான கஞ்சா கருப்பு! அரசு மருத்துவமனையில் போராட்டம்

சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஏசி ஓடுது டாக்டர் இல்ல” டென்ஷனான கஞ்சா கருப்பு! அரசு மருத்துவமனையில் போராட்டம்
“ஏசி ஓடுது டாக்டர் இல்ல” டென்ஷனான கஞ்சா கருப்பு! அரசு மருத்துவமனையில் போராட்டம்

கால் வலிக்காக சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற கஞ்சா கருப்பு, மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இங்கு போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். 

இந்நிலையில், காலை நேரத்தில், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பொதுமக்கள், மருத்துவர் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேநேரம் நடிகர் கஞ்சா கருப்புவும் சிகிச்சைக்காக செல்ல, மருத்துவர் இல்லாததை அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 7 மணியில் இருந்து ஓபி சீட் மட்டுமே போடப்படுவதாகவும், ஆனால் மருத்துவர்கள் இல்லாமல் அவர்கள் காக்க வைக்கப்படுவதாகவும் கஞ்சா கருப்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவர் அறையில் ஏசி மட்டும் ஓடுவதாகவும், ஆனால், மணிக்கணக்காக அங்கே டாக்டர் வரவே இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் கஞ்சா கருப்பு.

அதேபோல், உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர், ரத்த வாந்தி எடுத்தபடி சிகிச்சைக்கு வந்ததாகவும், ஆனால், மருத்துவர் இல்லாததால் அவர் நிலைமை மோசமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார் கஞ்சா கருப்பு. மேலும், நாய் கடிக்காக சிகிச்சைக்கு வந்த நபர் உட்பட பலரும் மருத்துவர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், இதுபற்றி கேட்டால் மருத்துவ நிர்வாகம் சரியான பதில் சொல்லாமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறியுள்ளார். தனியாக கிளினிக் வைத்து சம்பாதிக்கும் மருத்துவர்கள், அரசு மருத்துவமனையில் சம்பளத்துக்காக மட்டும் வந்து போவதாகவும் கஞ்சா கருப்பு குற்றம்சாட்டியுள்ளார். 

டியூட்டியில் இருக்க வேண்டிய டாக்டர் யார் என்பதை கூட மருத்துவமனை நிர்வாகம் சொல்லாமல் மறைப்பதாகவும், நோயாளிகள் அதிகளவில் இருக்கும் நிலையில், அதுபற்றி மருத்துவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருப்பதாக தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். 

இதுகுறித்து, நடிகர் கஞ்சா கருப்பு, குமுதம் செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியில், திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையின் நிலை மட்டமாகிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கஞ்சா கருப்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அரசு மருத்துவமனையில், பொதுமக்களுடன் ஒருவராக கஞ்சா கருப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். கஞ்சா கருப்பின் புகார் குறித்து விளக்கம் கொடுத்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், மூன்று மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், ஒருவர் மட்டுமே இருந்தால், சிகிச்சையளிக்க தாமதமானதாக கூறியுள்ளனர்.