தமிழ்நாடு

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சென்னை வியாசர்பாடி ஸ்டீபன்ஸ் லேன் பகுதியில் வசிப்பவர் வந்தனா. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 25 ஆம் தேதி வந்தனாவை செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர் எச்டிஎஃப்சி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எடுத்த பாலிசிக்கு பணம் கட்டவில்லை, ஆகவே உங்கள் வங்கி கணக்கு மூலம் பாலிசி தொகை 1.42 லட்ச ரூபாயை எடுத்து கட்டி விட்டதாகவும் அந்த பணத்தை நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வந்தனா என்னை கேட்காமல் எப்படி என் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தீர்கள் என கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை கட்டியே ஆகவேண்டும் என கூறியதால் வந்தனா பாலிசியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

உடனே அந்த நபர் உங்கள் எச்டிஎஃப்சி கிரிடிட் கார்டு எண்ணை தருமாறும் அப்போது தான் பாலிசியை ரத்து செய்ய முடியும் என கட்டாயப்படுத்தியதால் வந்தனா கிரிடிட் கார்டு எண்ணை தெரிவித்துள்ளார். உடனே வந்தனா தனது வங்கி கணக்கை ஆய்வு செய்த போது 1.65 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து கடந்த 6 ஆம் தேதி திடீரென வந்தனா செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது . அதில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 1.65 லட்ச ரூபாய் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வந்தனா உடனே இது குறித்து வங்கிக்கு சென்று விசாரித்த போது அடையாளம் தெரியாத நபர் நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது.. இதனை அடுத்து வந்தனா இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.