தமிழ்நாடு

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்

 சமூக நீதியை நிலைநாட்டும் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவ நாள் விழா நடைபெற்றது. முதலமைச்சர் பங்கேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் சிறப்பு மிக்க நாள். சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர். அவர் நமக்கான அடையாளம். அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் இயக்கமாக திராவிட இயக்கம் உள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. சமூகநீதி அரசாக திராவிட மாடல் அரசு இயங்கி வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடிங்குடியினர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணையாக இருக்கும்.

எம்.சி.ராஜாவுக்கு சிலை


மேலும், பட்டியலின மக்களின் துயரத்தை ஆங்கிலேயர்களிடம் எடுத்துச்சொன்னவர் எம்.சி.ராஜா. அவரின் பெயரில் கல்லூரி விடுதி கட்டடத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் எம்.சி.ராஜா மார்பளவு சிலை அமைக்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றம் வரவேண்டும் என்பதற்கானவே அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவித்தேன் . ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை உயர வேண்டும் என்பதற்காகத்தான் சமத்துவ கொண்டாட்டப்படுகிறது.

சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தாண்டும் சிறந்த 10 கிராமங்களுக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் 6,900க்கும் அதிகமாக சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம். இதன்மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம் என பெருமிதம் தெரிவித்தார்.

சமத்துவத்தை நோக்கி நகர்வோம்

சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம். சமூகப் பணிகளாலும் சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை சாத்தியப்படுத்துவோம். வெறுப்பரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது. சாதிய பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். நமது மனதில் ஏற்பட்டுள்ள சாதிய ஏற்றத்தாழ்வு அற்ற மாற்றம் அனைவரது மனதிலும் ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காலையில் சென்னை ஆர்.கே.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.