தமிழ்நாடு

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறு.. கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறு.. கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!
The cruelty that befell a wage laborer
நாய் கடிக்க முற்பட்டதால் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கூலித் தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நார்ப்பனட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோபால் (40). இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த கௌரம்மா (60) என்ற மூதாட்டியின் பேரனான முனியேந்திரன் (24), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக அவர் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, கோபாலின் நாய் முனியேந்திரனை கடிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலையில் முடிந்த வாக்குவாதம்

நாய் கடிக்க வந்ததால் ஆத்திரமடைந்த முனியேந்திரன், கோபாலின் வீட்டிற்குச் சென்று அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த வார்த்தைப் போர் சிறிது நேரம் நீடித்த நிலையில், கோபால் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் முனியேந்திரன் தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

ஆனால், இந்தச் சம்பவம் மனதளவில் கோபாலை உலுக்கியுள்ளது. சிறிது நேரம் கழித்து கோபால், முனியேந்திரன் இருந்த வீட்டிற்குச் சென்று அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முனியேந்திரன், தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் கோபாலின் மார்புக்குக் கீழ் பலமாக குத்தி உள்ளார்.

போலீசார் விசாரணை

கொடூரமாகத் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த கோபாலை, அவரது உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோபாலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்த கெலமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியதோடு, குற்றவாளியான முனியேந்திரனை உடனடியாகக் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.