தமிழ்நாடு

மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. நீதிமன்றத்தை நாடிய நபர்

பழைய பேட்டரி ஸ்கிராப் விற்பனை மோசடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. நீதிமன்றத்தை நாடிய நபர்
தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
சேலத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பழைய பேட்டரி ஸ்கிராப்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த சேத்தன் என்பவர் மூலமாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜலீல் என்பவருடைய பழக்கம் இவருக்கு கிடைத்துள்ளது. ஜலீல், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் பழைய பேட்டரி ஸ்கிராப்களை வாங்கி விற்கும் ராஜாவிடம் இருந்து பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு மூன்று தவணைகளில் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சென்னையில் உள்ள ஜலீலுக்கு ராஜா அனுப்பியுள்ளார். அனுப்பிய பொருளுக்கு பணம் கேட்டால் என் மீது நம்பிக்கை இல்லையா எனக் கூறி தொடர்ந்து பொருட்களை மட்டும் வாங்கி வந்ததாகவும் இது தொடர்பாக ஆவணங்கள் எதையும் ஜலீல் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் ராஜா தெரிவித்துள்ளார்.

தன்னை ஏமாற்றுவதை அறிந்த ராஜா ஒரு கட்டத்தில் ஜலீலிடம் பணத்தை கேட்ட போது அவர் செல்போனை எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, ஜலீல் குறித்து விசாரணை செய்துள்ளார். அப்போது அவர் பல பேரிடம் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜலீல் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த திருமங்கலம் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்து உள்ளார்.

போலீஸார் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை திருமங்கலம் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் ஜலீல் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.