தமிழ்நாடு

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தன் மகளின் கர்ப்பத்தை களைக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஜனவரி 7 ம் தேதி தன்னுடைய 16 வயதுடைய மகள் கருவுற்றிருப்பது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கர்ப்பத்தை களைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற போது, போதுமான வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டதால்,மாவட்ட அரசு மருத்துவமனையில் தன் மகளை அனுமதித்துள்ளார். அங்கு, மகளின் கர்ப்பம் 24 வாரங்களை கடந்து விட்டதாக கூறி கருவை களைக்க நீதிமன்றம்  தான் உத்தரவிட வேண்டும் என மாவட்ட அரசு மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, குழந்தை பெற்றுக் கொள்வது பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்பதால், அந்த மைனர் பெண்ணுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக்கூறி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அந்த பெண்ணின் கர்ப்பத்தை களைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக போக்சோ வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், அந்த சிசுவை பத்திரப்படுத்தி வைக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்