தமிழ்நாடு

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. சுவாச குழல் அருகே சிக்கியதால் மூச்சுத்திணறல்

திருமயம் அருகே நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியது. சுவாச குழல் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த நாணயத்தை லாவகமாக எடுத்து சாதித்துள்ளனர் திருமயத்தினை சார்ந்த டாக்டர்கள்.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. சுவாச குழல் அருகே சிக்கியதால் மூச்சுத்திணறல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜா. இவர் அப்பகுதியில் மெக்கானிக் ஆக வேலை பார்க்கிறார். இவரது மகள் மாலினி. 9 வயதான மாலினி, 4 ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளார். தற்போது தேர்வு முடிந்து கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். மாலினி் நேற்று சாக்லேட் வாங்க கடைக்கு வந்துள்ளார். அப்போது தன்னிடமிருந்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டுள்ளார். அதனை எதிர்பாராத விதமாக அவர் விழுங்கி விட்டார். இதனால் சற்று நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

தகவல் அறிந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு திருமயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் ராஜசேகர பாண்டியன், திவாகர், அருண் நேரு மற்றும் மருத்துவக் குழுவினர் ஸ்கேன் செய்தனர். பரிசோதனையில் சிறுமி விழுங்கிய நாணயம் சுவாச குழல் அருகே இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி நவீன கருவி வாயிலாக தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை வெளியே எடுத்துள்ளனர்.தற்போது சிறுமி ஆரோக்கியமாக உள்ளார். சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.