தமிழ்நாடு

மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலிஸ் காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, கைதான ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலிஸ் காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!
ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலிஸ் காவல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஞானசேகரனை கைது செய்யும் போது தவறி விழுந்து அவரது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரனின் வீட்டை சோதனை செய்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பினர். 

இந்த நிலையில் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர்.  மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். கால் முறிவு ஏற்பட்டதால் ஞானசேகரன் போலீசாரை தாங்கி பிடித்தபடி, சைதாப்பேட்டை 9 எம் எம் மேஜிஸ்திரேட் சுப்பிரமணியன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரமாக அவரிடம் தனியாக மாஜிஸ்ட்ரேட் விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஞானசேகரனை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக செல்போன் மற்றும் லேப்டாப்புகளில் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து ஞானசேகரனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் வேறொருவருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். மாணவி அளித்த வாக்குமூலம், இதேபோல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்ற பல கோணத்தில் ஞானசேகரன் இடம் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.