விளையாட்டு

உங்களுடைய Skincare Routine என்ன ? பிரதமர் மோடியிடம் கிரிக்கெட் வீராங்கனை எழுப்பிய சுவாரஸ்யக் கேள்வி!

மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

உங்களுடைய Skincare Routine என்ன ? பிரதமர் மோடியிடம் கிரிக்கெட் வீராங்கனை எழுப்பிய சுவாரஸ்யக் கேள்வி!
PM Modi and Harleen Deol
13-வது மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய நிலையில், கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகளைப் பிரதமர் மோடியுடன் புதுடெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்.

பிரதமருடன் வீராங்கனைகளின் உரையாடல்

பிரதமர் மோடியை சந்தித்த வீராங்கனைகள், அவரிடம் உலகக் கோப்பையை வழங்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, வீராங்கனைகள் ஒவ்வொருவரும் பிரதமரிடம் சில சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்ப, அவரும் அதற்குப் பதிலளித்து வந்தார்.

அந்தச் சமயத்தில், அணியின் முன்னணி வீராங்கனையான ஹர்லீன் தியோல், பிரதமரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "எனக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. நீங்கள் எப்படி இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறீர்கள்? உங்களது தினசரி சருமப் பராமரிப்பு என்ன?" என்று அவர் கேட்டார்.

ஹர்லீன் தியோலின் எதிர்பாராத இந்தக் கேள்வியால் அங்குச் சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்துக்கொண்டே, "இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்று கூறினார்.

பிரதமரின் பதில்

வீராங்கனைகளிடையே சிரிப்பலை நீடித்தபோது, ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா, "நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை இப்படிப் பிரகாசிக்க வைக்கிறது" என்று பதிலளித்தார்.

பின்னர் மீண்டும் பேசிய பிரதமர் மோடி, "நிச்சயமாக அதுதான் உண்மை. இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன். இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.