விளையாட்டு

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!
Surya Kumar Yadav
துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டித் தொடரில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான இறுதி ஆட்டம்

நேற்று (செப். 28) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.

ஊதியத்தை வழங்கிய கேப்டன் சூர்யகுமார்

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நமது ஆயுதப் படைக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் இந்தத் தொடருக்கான எனது போட்டிக் கட்டணத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் எப்போதும் என் நினைவுகளில் உள்ளீர்கள்" என்று தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடருக்கான சூர்யகுமாரின் ஊதியம் ரூ. 28 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த முடிவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.