விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய வரலாற்றை எழுதியது கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய வரலாற்றை எழுதியது கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா
southafrica wins the icc world test championship title against austalia
கிரிக்கெட் உலகின் மிக உயரிய டெஸ்ட் தொடரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 சுழற்சியின் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 ஆம் தொடங்கியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவும் இந்த இறுதிப் போட்டியில் மோதின.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா முதல் இன்னிங்ஸில் அபாரமாகப் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை அளித்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் அரைசதம் அடித்தாலும், தென்னாப்பிரிக்க பந்துவீச்சின் முன் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா திணறியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.

எனக்கே தண்ணீ கட்டுறீங்களா? என பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் தன் முழுப்பலத்தையும் காட்டியது. இதனால் வெறும் 138 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி. சிறப்பாக பந்து வீசிய கம்மின்ஸ் 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, ஆரம்பம் முதலே அதிர்ச்சி அளித்தது தென் ஆப்பிரிக்கா அணி. முதல் 6 வீரர்களில் இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்கை தாண்டினர். முடிஞ்சது ஆட்டம் என ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்களை நம்பிக்கை தளர்ந்த போது, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் கோப்பை கனவை தகர்க்கும் வகையில் மட்டையை சுழற்றினர்.

இதனால் ஆட்டம் சுவாரஸ்யமடைந்தது. மிட்சல் ஸ்டார்க் 58 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் தன்பங்குக்கு 43 ரன்களை குவித்தார். இறுதியில் இரண்டாவது இன்னிங்க்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 207 எடுத்தது. முதல் இன்னிங்க்ஸின் முன்னிலை ஸ்கோருடன் சேர்த்து தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி.

282 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்தாலும், எய்டன் மார்க்ரம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்கள் குவித்து போட்டியை தென் ஆப்பிரிக்கா அணியின் பக்கம் சாய்த்தார். கேப்டன் டெம்பா பவுமா (66 ரன்கள்) போட்டிக்கு நடுவே தசைபிடிப்பால் பாதிக்கப்பட்டாலும் மறுமுனையில் எய்டன் மார்க்ரமுக்கு துணையாக நின்று வெற்றிக்கு அடித்தளமிட்டார். இறுதியில், தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்கள் என்கிற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

தென் ஆப்பிரிக்கா அணியின் நீண்ட கால கனவை நினைவாக்கிய எய்டன் மார்க்ரம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அவர்களால் ஜொலிக்க முடியவில்லை என விமர்சித்தவர்களுக்கு, இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி.