விளையாட்டு

Shubman Gill: 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் செய்த அரிய சாதனை!

Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Shubman Gill: 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் செய்த அரிய சாதனை!
Shubman Gill Record Breaking Feat New Heights in Indian Test Cricket
Shubman Gill: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைப்பெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்ற நிலையில், இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை குவித்தது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேரி ஃப்ரூக் மற்றும் விக்கெட் கீப்பர் ஸ்மித் ஆகியோர் சதம் விளாசி அசத்தினார். இருப்பினும் மற்ற வீரர்கள் அணியின் ஸ்கோருக்கு போதிய பங்களிப்பு வழங்காத நிலையில், 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சுப்மன் கில் படைத்த சாதனைகள்:

180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்திய அணி. இதில் ராகுல், பந்த், ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாச மறுமுனையில் வரலாற்றில் தன் பெயரை எழுதிக் கொண்டிருந்தார் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில். இந்த டெஸ்ட் தொடரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-

1. SENA நாடுகளில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டன்.

2. 148 வருடமாக நடைப்பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையினை பெற்றார் சுப்மன் கில்.

3. கடந்த 87 ஆண்டுகளில் ஒரே டெஸ்டில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் சுப்மன் கில் தான். எட்ஜ்பாஸ்டனில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸூம் சேர்த்து மொத்தம் 430 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது அதிகப்பட்ச ரன்னாகும். 1990- ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிராக கிரஹாம் கூச் ஒரே டெஸ்ட் போட்டியில் 456 ரன்கள் குவித்ததே இன்று வரை உலக சாதனையாக உள்ளது. இந்த பட்டியலில் மார்க் டெய்லர், குமார் சங்கக்காரா, பிரையன் லாரா போன்ற வீரர்களை முந்தியுள்ளார்.

4. ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் 54 ஆண்டுக்கால சாதனையினையும் சுப்மன் கில் தகர்த்தெறிந்து உள்ளார். 1971 ஆம் ஆண்டு, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சுனில் கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்து உள்ளார் சுப்மன் கில்.

5. ஒரே டெஸ்டில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்கிற சாதனையையும் இந்த போட்டியில் படைத்துள்ளார் சுப்மன் கில். முன்னதாக இதேப்போல் இரட்டை சதம் மற்றும் சதம் என கவாஸ்கர் அடித்துள்ளார். ஆனால், அவர் கேப்டனாக இதை செய்யவில்லை.

6. கேப்டனாக தான் விளையாடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசி அசத்தியுள்ளார் சுப்மன் கில்

ரோகித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்வான போது பல விமர்சனங்கள் எழுந்தன. அத்தனை விமர்சனங்களுக்கும் தனது பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார் சுப்மன் கில்.

இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையுடன் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைப்பெற உள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.