விளையாட்டு

13 வருட டேட்டிங்.. 7 வருட திருமண வாழ்வு.. கணவரைப் பிரிந்த சாய்னா: யார் இந்த காஷ்யப்?

”நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி” என இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் வின்னரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

13 வருட டேட்டிங்.. 7 வருட திருமண வாழ்வு.. கணவரைப் பிரிந்த சாய்னா: யார் இந்த காஷ்யப்?
Saina Nehwal Announces Divorce from Parupalli Kashyap After 7 Years of Marriage
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது காதலரும், பேட்மிண்டன் வீரருமான பருப்பள்ளி காஷ்யப்பினை மணந்தார். இந்நிலையில், 7 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு காஷ்யப்பினை விவாகரத்து செய்துள்ளதாக சாய்னா நேவால் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிவித்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த காஷ்யப்?

ஹைதராபாத்தில் பிறந்த பருப்பள்ளி காஷ்யப், பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் முகமாக ஒருகாலத்தில் திகழ்ந்தார். இவரது இளம் வயதில் ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்ட போதும், விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். பெங்களூரிலுள்ள படுகோன் அகாடமியில் சிறிது காலம் பேட்மிண்டன் பயிற்சி பெற்றார். பின்னர் ஹைதராபாத் திரும்பி புகழ்பெற்ற பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார்.

இதே அகாடமியில் தான் பேடமிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலை முதன் முறையாக சந்தித்தார் காஷ்யப். நட்பாக தொடங்கிய இவர்களது உறவு பின்னர் காதலாக மலர்ந்தது. இந்த காலக்கட்டத்தில் தான் புகழின் உச்சிக்கு சென்றார் காஷ்யப்.

2010 ஆம் ஆண்டு நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டியில், பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்தார். பேட்மிண்டன் விளையாட்டில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான அர்ஜூனா விருது 2012 ஆம் ஆண்டு காஷ்யப்புக்கு வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறினார். அதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் எந்த ஆடவ இந்தியரும் காலிறுதி வரை முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு பேட்மிண்டன் உலக தரவரிசையில் 6-வது இடம் வரை முன்னேறினார். 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.

சாய்னா நேவாலுடன் திருமணம்:

ஒருபுறம் பேட்மிண்டன் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கோபிசந்த் அகாடமியில் சந்தித்த சாய்னா நேவாலுடன் 2004 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வந்தார். இருவரும் காதலிக்கிறார்கள் என்கிற செய்தி ஏறக்குறைய அனைவருக்கும் தெரிந்து இருந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாய்னா நேவாலை திருமணம் செய்துக்கொண்டார்.

திரைப்பிரபலங்கள் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்த காலத்தில், புகழின் உச்சத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள் திருமணம் செய்து கொண்டது அப்போது பேசுப்பொருளாக விளங்கியது. ஊடகங்களின் வெளிச்சத்திலிருந்து எப்போதும் விலகியே தான் இருந்தார் காஷ்யப். இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உறவில் முறிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் விளையாட்டு பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராகிய சாய்னா நேவால், ஜுலை 13 ஆம் தேதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் காஷ்யப்புடனான திருமண உறவினை முறித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை பார்த்து சில ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.