விளையாட்டு

ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி - டிராவிட்டின் முயற்சி நிறைவேறுமா?

Rahul Dravid Panel To Join Cricket in Olympics : 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் தொடரில், கிரிக்கெட் விளையாட்டை இணைப்பதற்கான முயற்சியில், ராகுல் டிராவிட் குழு முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி - டிராவிட்டின் முயற்சி நிறைவேறுமா?
2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகள்

Rahul Dravid Panel To Join Cricket in Olympics : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை விளையாட்டாக மட்டும் கருதாமல், அதனை ஒரு திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1983ஆம் ஆண்டு முன்னதாக, பெரிய அளவில் இந்திய மக்களிடம் வரவேற்பு இருந்ததில்லை. ஆனால், கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற தருணம் தான் திருப்பு முனையாக அமைந்தது.

கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மதன் லால், சையது கிர்மானி, திலீப் வெங்கர்கார், ரவி சாஸ்திரி, மொஹிந்தர் அமர்நாத், ரோஜர் பின்னி ஆகியோர் இந்திய மக்களால் கொண்டாடப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, மொஹமது அசாருதின், சேத்தன் சர்மா, நவ்ஜோத் சிங் சித்து, சஞ்சய் மஞ்ரேகர், மனோஜ் பிரபாகர் ஆகியோர் மக்கள் மத்தியில் இடம்பிடித்தனர்.

தொன்னூறுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வினோத் காம்ப்ளி, பிரவின் ஆம்ரே, அஜய் ஜடேஜா, ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ராபின் சிங், ராகுல் டிராவிட், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் பிரபலம் அடைந்ததோடு, கிரிக்கெட் உலகில் தங்களது வெற்றிகளை பதிவு செய்தனர்.

தென் ஆப்பிரிக்காவுடனான தொடரின் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டதை அடுத்து மொஹமது அசாருதின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டது, சர்வதேச அளவில் இந்திய அணியின் பெயருக்கும் ஊறு விழைந்தது. இதனையடுத்து, இந்திய அணி சிலகாலம் தடுமாறியது. சச்சின், டிராவிட் என கேப்டன்களை மாற்றிப்பார்த்தும் பயனில்லை.

2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக சவுரவ் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு, இந்திய அணியின் வடிவம் மாறிப்போனதோடு, அணுகுமுறையும் மாறியது. இந்திய அணி திருப்பி அடித்தால் எப்படி இருக்கும் என்று உலகிற்கு காட்டியது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அனைவருமே இளைஞர்கள். சச்சின், கங்குலி, டிராவிட், ஸ்ரீநாத், கும்ப்ளே ஆகியோர் மட்டும் அனுபவ வீரர்களாக இருந்தது.

மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை கைப்பற்றியது. தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக்கோப்பை வென்றுள்ளது. அந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, ஒவ்வொரு தொடரிலும் கோப்பையை வெல்லும் அணியாக இந்திய கிரிக்கெட் அணி இருந்து வருகிறது.

ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, உலகின் மிகப்பெரிய தொடரான ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறாதது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. இதற்கான முன்னெடுப்புகள் நடந்தபோதிலும், கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக் தொடரில் இடம்பெறவில்லை.

இதற்கு முன்னதாக 1900ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றன. ஆனால், அதில், இரண்டே இரண்டு அணிகள் மட்டுமே இடம்பெற்றன. ஒன்று இங்கிலாந்து மற்றொன்று ஃபிரான்ஸ்.

இதற்குப் பிறகு 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான குழுவில் இடம்பெறும் முக்கியப் பெயர்களில் டிராவிட் ஒருவர். தவிர,ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் ஆகியோரும் குழுவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா ஹவுஸில் கூடவுள்ளது. மேலும் இந்த குழுவில் ராகுல் டிராவிட் போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவர் இடம்பெற்று இருப்பது, கிரிக்கெட் வரலாற்றின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும் விஷயாமாகும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028 ஜூலை 26 தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.